சீனாவில் முதலில் பரவிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தொற்று தற்போது அந்நாட்டைத் தாண்டியும் அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தற்போது மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளும் கோவிட்-19 வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 31 பேருக்கு இதுவரை கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கிறதா என்று விமான நிலையங்களிலேயே சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
"இத்தாலி நாட்டிலிருந்து திரும்பிய பலருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்திக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
ஏனென்றால் அவர் ஆறு நாள்களுக்கு முன்னர்தான் இத்தாலியிருந்து திரும்பினார்" என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி தெரிவித்திருந்தார். இது குறித்து நாடாளுமன்றத்தில் சுயேச்சை எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் இதற்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் மற்ற பயணிகளைப் போலவே கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்து ராகுல் காந்தியிடமும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு பிப்ரவரி 29ஆம் தேதி மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: ஈரானிலிருக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்