உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை அம்மாநில காவல்துறை தடுப்புக் காவலில் தற்போது வைத்துள்ளனர். முன்னதாக டெல்லி-உ.பி எல்லைப் பகுதியான நொய்டாவில் இருவரின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடைபயணமாகவே இருவரும் தொண்டர் படை சூழ ஹத்ராஸ் நோக்கி நடக்கத் தொடங்கினர்.
இந்தப் பயணத்தின்போது காங்கிரஸ் தொண்டர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை தடியடி நடத்தியது. மேலும், காவல்துறைக்கும் ராகுல் காந்திக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ராகுல் காந்தி நிலைத் தவறி கீழே விழுந்த சம்பவம் அங்கு மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள ராகுல், பிரியங்கா காந்தி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியிடம் காவல்துறை நடந்துகொண்ட முறையை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.