உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நேற்று (ஆக. 5) பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபன் பட்டேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார சபைக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும் என்று நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், 'அயோத்தி அடிக்கல் நாட்டு விழா குறித்து பிரியங்கா காந்தி கூறியது ஒன்றும் எனக்குப் புதிதாக இல்லை. ராஜிவ் காந்தி, நரசிம்மராவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் இதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தனர். மதச்சார்பின்மையில் காங்கிரஸிற்கு எந்த நிலைப்பாடும் இல்லை
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் நிலைப்பாடு எனக்கு வித்தியாசமாக இல்லை. காங்கிரஸ்காரர்கள் மென்மையான இந்துத்துவாவை கடைபிடிக்கின்றனர்' எனத் தெரிவித்தார்.
மேலும், அயோத்தி பிரச்னையில் சிபிஐயின் நிலைப்பாட்டை கட்சி ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அயோத்தி விவகாரம் பற்றி வரும்போது, அங்கு யார் வழிபாட்டை அனுமதித்தார்கள்? அது காங்கிரஸ் தான். அங்கே சிலை வைக்க அனுமதித்தவர் யார்? அதுவும் காங்கிரஸ். ரத யாத்திரைக்கு யார் அனுமதி கொடுத்தது? அதுகூட காங்கிரஸ்.
அதுமட்டுமின்றி பாபர் மசூதியை இடிக்கும்போது, காங்கிரஸ் கண்களை மூடிக்கொண்டு, அமைதியாக அனுமதித்தது. அப்போது காங்கிரஸ் தானே மத்தியில் ஆட்சியில் இருந்தது. அதன் கூட்டணியாக முஸ்லீம் லீக் கட்சியும் (ஐயூஎம்எல்) இருந்தது. இவை அனைத்தும் நமது வரலாற்றின் ஒரு பகுதியாகும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க....நாட்டை அதிகமாக நேசிப்பதால் நியாமற்ற நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்