நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 10க்கும் மேற்பட்ட சட்ட முன்வடிவுகளை அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அப்போது எதிர்த்தன.
நாடு முழுவதும் மத்திய அரசின் இந்தச் சட்ட முன்வடிவுகளைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.
இருப்பினும், கடந்த செப்.27ஆம் தேதியன்று அவற்றுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, சட்ட அங்கீகாரம் வழங்கினார்.
இது விவசாயிகளை மேலும் கொதிப்படைய செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல் என உச்சக்கட்ட போராட்டங்கள் பஞ்சாப், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்தன.
அதன் ஒரு பகுதியாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்ட முன்வடிவுகளை எதிர்த்து பஞ்சாபில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் செப் 24ஆம் தேதி தொடங்கிய 'ரயில் ரோகோ' போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் அமிர்தசரஸ் தேவி தாஸ்பூரா கிராம விவசாய தலைவர் சங்கத் சுக்விந்தர் சிங் சப்ரான் பேசியபோது, "நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனை கொண்டுவந்த பாஜகவும், ஆதரித்த அரசியல் கட்சிகளும் இனி ஒருபோதும் பஞ்சாபில் வெல்ல முடியாது. இது மக்களின் போராட்டம், விவசாயிகளின் போராட்டம். அப்படியே தொடரட்டும்.
ரயில் ரோகோ போராட்டம் நடைபெற்றுவரும் இந்த நேரத்தில் பஞ்சாபில் டிராக்டர் பேரணி என்ற பெயரில் ஆடம்பர சொகுசுப் பேரணியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தியுள்ளார். இது யாரை ஏமாற்ற எனத் தெரியவில்லை.
விவசாயிகளின் போராட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அரசியல் லாபம் தேட வேண்டாம்.
அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகள் வரவிருக்கும் தேர்தலுக்கான ஸ்டண்ட் என அறியாதவர்கள் அல்ல நாங்கள். அவர்கள் உண்மையிலேயே ஏதாவது செய்ய விரும்பினால் அதை நாடாளுமன்றத்தில் செய்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.