பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.20) பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாடப் போகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ள ட்வீட்டில், “இந்தியாவிலிருந்து சீனர்கள் என்று வெளியேறுவார்கள் என்பதை முதலில் கூறுங்கள்” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னதாக இந்திய- சீன இராணுவ வீரர்களுக்கு இடையே கிழக்கு லடாக்கில் நடந்த வன்முறையில் தமிழ்நாட்டு வீரர் உள்பட 20 ராணுவ வீரர்கள் வீரமரணடைந்தனர். தொடர்ந்து சீனர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல்கள் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தன.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்களே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்த உண்மை நிலையை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தற்போது பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில், சீன வீரர்களின் இந்திய நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மோடி பேச வேண்டும் என ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய-சீனா எல்லை விவகாரம்: 7ஆவது சுற்று பேச்சுவார்த்தை!