டெல்லி: ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணி மத்திய அரசை தடுமாறச் செய்துள்ளது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில், “விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் போராடிவரும் விவசாயிகளில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதைப் பற்றியெல்லாம் நரேந்திர மோடி அரசு கவலைக் கொள்ளவில்லை, மாறாக ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணி மத்திய அரசை தடுமாறச் செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி 7ஆம் தேதி விவசாயிகள் டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணியை நாடே திரும்பி பார்த்தது. இதே உத்வேகத்துடன் ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தினத்திலும் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு தடை விதித்தும், 4 பேர் கொண்ட குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் 8 கட்டங்களாக நடைபெற்றும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி தமிழ்நாடு வருகை