ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100ஆம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு நாள் முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) வாக்கு சேகரித்த ராகுல் காந்தி, நேற்று நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் சென்றடைந்தார். அங்கு அவரை அம்மாநில முதலமைச்சர் கேப்டன் அமரேந்திர் சிங் வரவேற்றார். பின்னர், புகழ்பெற்ற புனித பொற்கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு செய்தார்.

இதனையடுத்து அங்குள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக இந்தியாவில் உள்ள பிரிட்டன் தலைமை ஆணையர் சார் டோமினிக் ஆஷ்குத் ஜாலியன் வாலாபாக் நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தினார்.

'ஜாலியன் வாலாபாக் படுகொலையில், பலியான சுந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகத்தை என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம். அவர்களுக்கு மனமார்ந்த எனது அஞ்சலியை செலுத்துகிறேன்' என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

'ஜாலியன் வாலாபாக் கொடூர தாக்குதலில் பலியான எங்களது சுந்திரப் போராட்ட தியாகிகளுக்கு, எனது அஞ்சலியை செலுத்துகிறேன்' என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார்.
