அசாம் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் நவம்பர் 23ஆம் தேதி காலமானார். கோவாவிலிருந்து கவுகாத்திக்கு சிறப்பு விமானத்தில் சென்ற ராகுல் காந்தி, தருண் கோகாயின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீமந்த சங்கர்தேவா கலாசேத்ராவில் கோகாயின் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "கோகாய் அசாம் மாநிலத்தின் தலைவர் மட்டுமல்ல. சிறந்த முதலமச்சரான அவர் ஒரு தேசிய தலைவர். மக்கள் அனைவரையும் ஈர்த்து ஒற்றுமைப்படுத்தினார். மாநிலத்தில் அமைதி நிலவ செய்தார். அசாம், இந்தியாவுக்கு சிறப்பான சேவையை ஆற்றியுள்ளார்.
அவருடன் நீண்ட காலமாக பயணித்துள்ளேன். அவர் என்னுடைய குரு. அசாம் மாநிலத்தின் சிறப்புகளையும் மக்கள் குறித்தும் என்னிடம் விளக்கியுள்ளார். தனிப்பட்ட அளவில் இது எனக்கு பெரிய இழப்பு" என்றார். தருண் கோகாயின் உடல், நவம்பர் 26ஆம் தேதி நவகிராகாவில் நல்லடக்கம் செய்யப்படும் என மாநிலத்தின் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர்(அப்போதைய பிரதமர்) லோக்பிரியோ கோபிநாத் போர்டோலோயின் உடல் நவகிராகாவில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், அவருக்கு அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை மூன்று முறை அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக தருண் கோகாய் பதவி வகித்துள்ளார். பின்னர் 1985-1990ஆம் ஆண்டு வரை பிரதமர் ராஜீவ் காந்தியின் கீழ் அகில இந்திய காங்கிரஸ் (ஏ) குழுவின் பொதுச்செயலாளராக தருண் கோகாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991-1996ஆம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசின் கீழ், மாநில உணவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள டைட்டாபார் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து முறை தருண் கோகாய் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் அதே தொகுதியிலிருந்து ஆறு முறை மக்களவை உறுப்பினராக தருண் கோகாய் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.