கோவிட்-19 பரவலால் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவரும் இந்தச் சூழ்நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் வானிலை காரணமாக மற்றுமொரு பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. ஆம்பன் புயல் இவ்விரு மாநிலங்களிலும் நடத்திய கோரத்தாண்டவத்தில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி ஆம்பன் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆம்பன் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் கவலை அளிக்கிறது.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக மீண்டு வர வேண்டும் என்று பிராத்திக்கிறேன். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இவ்விரு மாநிலங்களிலுள்ள துணிச்சலான மக்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆம்பன் புயல் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைப் பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
முன்னதாக, வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தவிர புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2.5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்பன் புயலால் 19 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு