பாஜக தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதமான பேச்சுக்கு எதிராக, ஃபேஸ்புக் நிறுவனம் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என முன்னதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே, புகழ்பெற்ற வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், இந்தியாவில் பணிபுரியும் ஃபேஸ்புக் உயர்மட்ட அலுவலர்கள், பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக செய்தி வெளியானது.
ஃபேஸ்புக் நிர்வாகி அங்கி தாஸ், மோடியின் பேத்தி என்றழைக்கப்படுவதாக பிரபல பத்திரிகையான 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டது. இதையடுத்து, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பாஜக தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தி தேர்தல் ஜனநாயகத்தில் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் தேசிய விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது, அதன் செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் ஜனநாயகம், சமூக நல்லிணக்கம் மீதான ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பின் வெட்கக்கேடான தாக்குதலை சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
தேசிய விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு நிறுவனத்தை அனுமதிக்க முடியாது. அவர்களை உடனடியாக விசாரித்து, குற்றம் நிரூபணமானால் தண்டிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வறுமைக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்!