இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது தொகுதியிலுள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வழியே உரையாடினார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த உரையாடலின்போது உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் வயநாட்டில் சிறுநீரகம், கல்லீரல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது சந்தித்துவரும் நெருக்கடி குறித்துத் தெரிவித்தனர்.
இந்த நோயாளிகளுக்கு உதவுவதாக ராகுல் காந்தி உறுதியளித்ததாகவும், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைப்பதை தான் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்ததாகக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்தனர். சுமார் ஆயிரம் பேருக்கு ராகுல் காந்தி உதவ உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, ராகுல் காந்தி தனது தொகுதிக்கு தெர்மல் ஸ்கேனர்களையும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அனுப்பியிருந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர்கள் அடீலா அப்துல்லா, ஜாபர் மாலிக் ஆகியோருடன் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இதுதவிர தனது தொகுதி மேம்பாடு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளார்.
வைரஸ் பரவலை கண்டறிய அதிக சோதனைகளை நடத்த வேண்டும் என்பதை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், வைரஸ் பரவல் இல்லாத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
"லட்சக்கணக்கான விவசாயிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலிகள், வணிக உரிமையாளர்களுக்கு பெரும் துயரங்களை அளித்த இந்த முறையற்ற ஊரடங்கை அமல் செய்ததற்கு மத்திய அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பால் அதிர்ச்சி!