ராகுல் காந்தி சமீப நாள்களாகவே மத்திய அரசை விமர்சித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவுகளை பதிவிடுகிறார்.
இந்நிலையில், தனியார் நிறுவனங்கள் வங்கிகளின் பணத்தை முறைகேடாக கையாடல் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கிகளில் இருக்கும் மக்களின் பணத்திலிருந்து 2426 நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி ரூபாயை சுருட்டி இருக்கின்றன.
பிஜேபி அரசு இந்த கொள்ளையை விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்குமா? அல்லது நீரவ் மோடி, லலித் மோடிபோல் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல உதவி செய்யுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப நாள்களாகவே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்துவருகிறார். அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் பரவல் குறித்து ராகுல் காந்தி தொடக்கம் முதலே எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார்.
குறிப்பாக கரோனா குறித்து மற்ற தலைவர்கள் சிந்திப்பதற்கு முன் ராகுல் காந்தி பிப்ரவரி 12ஆம் தேதியே, கரோனா பரவலால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தனது முதல் ட்வீட்டை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில்களை தனியார்மயமாக்குவது யாருக்கு நன்மை பயக்கும்?