இன்று நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் சூழ்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில், மருத்துவர்களும் செவிலியர்களும் தீராது உழைத்துவருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று நாடு முழுவதுமுள்ள செவிலியர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் விபின் கிருஷ்ணன், ""ராகுல், நான் உங்கள் கவனத்திற்கு இதைக் கொண்டு வர விரும்புகிறேன். டெல்லியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு செவிலியர்கள் இறந்துவிட்டனர்.
இருப்பினும், அவர்களுக்கு இதுவரை டெல்லி அரசு அறிவித்த ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படவில்லை" என்றார். இது குறித்து டெல்லி அரசுக்கு கடிதம் எழுதுவதாக ராகுல் காந்தி உறுதியளித்தார்
தொடர்ந்து பேசிய விபின் கிருஷ்ணன், "சில புள்ளிவிவரங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நம்மிடம் 1.2 மில்லியன் பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்கள் உள்ளனர். அதேபோல நாடு முழுவதும் சுமார் 3.7 மில்லியன் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.
அதாவது நாட்டில் 1500 பேருக்கு ஒரு மருத்துவரும் 1000 போருக்கு 1.7 செவிலியர்களும் உள்ளனர். ஆனால், உலக சுகாதார அமைப்பு குறைந்தபட்சம் 1000 பேருக்கு ஒரு மருத்துவரும் 1000 பேருக்கு மூன்று செவிலியர்களும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கரோனா பரவலும் உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், நாம் பரிசோதனைகளை குறைத்துள்ளோம். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை" என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, "அரசு மக்களின் மனநிலையை மாற்ற முயல்கிறது. பிரச்னை மிக மோசமானதாக இல்லை என்று காட்டிக்கொள்ள அரசு முயல்கிறது. ஆனால், இது தவறான அணுகுமுறை. நாம் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும் என்றே நான் நம்புகிறேன். எனவே, நாம் பிரச்னை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போது நாம் என்ன மாதிரியான சிக்கலை எதிர்கொள்கிறோம் என்று துல்லியமாக வரையறுக்க வேண்டும். அதன் பின்னர் பிரச்னையை எதிர்த்துப் போராட வேண்டும்" என்றார்.
மேலும், கரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்கும்போது உயிரிழக்கும் செவிலியர்களுக்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதையும படிங்க: 'முழு அர்ப்பணிப்புடன் மருத்துவர்கள் செயலாற்றுகின்றனர்' - சுகாதாரத் துறை அமைச்சர்!