திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுவை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இதையடுத்து எம்.எல்.ஏ. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு விழுந்த அஞ்சல் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன என்று குற்றம்சாட்டினார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த முடிவுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இதுகுறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கையை விசாரிக்க தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதற்கான தடையை நீட்டித்து விசாரணையை வருகிற 22ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ஆம் தேதிவரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் இறுதி விசாரணை குறித்து நவம்பர் 29ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பாவு, இன்பதுரை தரப்பில் ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கனிமொழிக்கு எதிரான வழக்கை தூத்துக்குடி வாக்காளர் நடத்தலாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!