விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்துள்ள நிலையில், தலைநகர் முழுவதும் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த உயர்மட்ட கூட்டத்தில், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
டெல்லியின் பல பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அனுமதி வழங்காத பகுதிகளில் நுழைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடுப்பை மீறியது குறித்தும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, துணை ராணுவ படை குவிக்கப்படும் என கூறப்படுகிறது. துவாரகை, நஜாப்கர் ஆகிய இடங்களை இணைக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு டெல்லி - தேசிய தலைநகர் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் எல்லை பகுதிகளில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக விவசாயிகள் அறவழியில் போராடிவந்தனர். காவல் துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஐடிஓ பகுதிக்குள் விவசாயிகள் நுழைந்தனர். மிக முக்கிய நபர்கள் வாழும் பகுதிகளின் நுழைவாயிலாக ஐடிஓ விளங்குகிறது.