திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவத்திற்குப் பிந்தைய புஷ்பயாகம் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் எழுந்தருளிய மலையப்ப சுவாமியின் ஜன்மநட்சத்திர தினத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது இந்து நாட்காட்டியின் படி தெலுங்கு கார்த்திகை மாதத்தில் நடைபெறும் . அந்த வகையில் இந்த ஆண்டு இந்த புனித நிகழ்வு நவம்பர் மாதம் நடைபெற்றது. புஷ்பாயகத்திற்கு முன்னதாக அங்குரார்பன சிறப்பு பூஜை தொடங்கியது.
அப்போது, சேனாதிபதி விஸ்வசேனா அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வந்த எம்பெருமான் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்குள்ள கல்யாண மண்டபத்தில் பால், தயிர், தேன், சந்தனத்தூள், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, வேதபண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க துளசி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மருவம், தாழம்பூ போன்ற 18 வகையான 8 டன் தெய்வீக மலர்களால் புஷ்பாயகம் நடைபெற்றது.
சுவாமியின் மார்பு வரை பூக்களால் மூடப்பட்டிருந்த காட்சியை கண்ட பக்தர்கள் பக்திப் பெருக்கால் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டனர். அதனைத் தெதாடர்ந்து, நான்கு மாடவீதிகளிலும் சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையும் படிங்க:குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மலையப்ப சுவாமி!