நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி என்றால் நம் நினைவுக்கு வருவது வண்ணப்பொடிகள்தான். ஹோலியைக் கொண்டாடி மகிழும்விதமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைப் பூசி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
இந்த நடைமுறைக்கு மாறாக பிகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று விசித்திரமான முறையில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறது.
பிகாரில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் உள்ள கிராமத்து மக்கள் ஹோலி பண்டிகையன்று வண்ணப்பொடிகளுக்குப் பதிலாக சாம்பலைப் பூசிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. அந்தக் கதையின்படி, அசுர குல மன்னரான ஹிரண்ய கசிபு, தான்தான் கடவுள் என இறுமாப்புடன் கூறிவந்தான். ஆனால், அவனது மகன் பிரகலாதனோ, விஷ்ணுவே முழுமுதற்கடவுள் எனக் கூறவே ஹிரண்ய கசிபு ஆத்திரமடைந்தான்.
ஹிரணியனின் சகோதரி ஹோலிகா தன்னை நெருப்பு எரிக்காத வரத்தைப் பெற்றவள். இந்த வரத்தைக் கொண்டு பிரகலாதனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த ஹிரணியன் தனது சகோதரி ஹோலிகாவை பிரகலாதனுடன் சேர்ந்து அக்னிப் பிரவேசம் மேற்கொள்ளுமாறு கூறினான்.
ஹோலிகா தனியே அக்னிப் பிரவேசம் செய்தால்தான் வரம் எடுபடும் என்பதால், பிரகலாதனுடன் நெருப்பில் இறங்கிய அவள் சாம்பலானாள். அதேவேளையில், தனது பக்தனான பிரகலாதனை, விஷ்ணு நெருப்பிலிருந்து காப்பாற்றினார்.
இந்தக் கதையை, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி என்று கருதும் பூர்னியா பகுதி மக்கள், இதை நினைவில் கொள்ளும் வகையில் ஹோலிப் பண்டிகையில் ஹோலிகாவின் சாம்பலை அள்ளிப் பூசிக்கொள்வதை நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய கொரோனா