பஞ்சாபிலிருந்து சொந்த மாநிலம் சென்ற 4 லட்சம் மக்கள் - தேசிய செய்திகள்
சண்டிகர்: நான்கு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரூ .21.8 கோடி செலவில் பஞ்சாபிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயில் மூலம் அனுப்பப்பட்டனர் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த மக்கள், தற்போது அவரவர் சொந்த மாநிலங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பஞ்சாப் பட்டியாலாவிலிருந்து இன்று(மே 25) 300ஆவது ரயில் புறப்பட்டது.
பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் உத்தரவின் பேரில், இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்கு பஞ்சாப் அரசு வசதி செய்துள்ளது.
இதுகுறித்து நோடல் அலுவலர் விகாஸ் பிரதாப் கூறியதாவது; 'இன்று (மே 25) 23 ரயில்கள் செல்ல உள்ள நிலையில், இதனுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 311 ரயில்கள் ஆக உயர்ந்துள்ளது. இதற்காக, மாநில அரசு தற்போதுவரை 21.8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. மேலும் புலம் பெயர்ந்தவர்களை அனுப்பும் பணியில், பஞ்சாப் முதலிடம் வகிக்கிறது.
பட்டியாலாவிலிருந்து புறப்பட்ட 300ஆவது ரயிலை துணை ஆணையர் குமார் அமித் கொடியசைத்து அனுப்பிவைத்தார். இந்த ரயில் உத்தரப்பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த மக்களை அழைத்துச் செல்கிறது. தங்களின் சொந்த மாநிலத்திற்குச் செல்ல விரும்பும் மக்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
மேலும் புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும், தங்களின் விருந்தினர்களாகக் கருதி அனைத்துத்துறை அலுவலர்களும் உழைத்த வண்ணம் உள்ளனர். மேலும், பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த மக்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாமல் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என 'முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங்' உறுதியளித்துள்ளார்.
இதுவரை 311 ரயில்களில் அதிகப்பட்சம் 204 ரயில்கள் உத்தரப்பிரதேசத்திற்கும், 82 ரயில்கள் பிகாருக்கும், 9 ரயில்கள் ஜார்க்கண்டிற்கும், 7 ரயில்கள் மத்தியப் பிரதேசத்திற்கும், தலா இரண்டு ரயில்கள் என சண்டிகர், மேற்கு வங்காளத்திற்கும், தலா ஒரு ரயில் என மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர், தமிழ்நாடு, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் பயணம் செய்தவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உட்பட அத்தியாவசியப் பொருள்கள் தரப்பட்டு வருகிறது. இதுபோன்று மற்ற மாநிலத்தில் புலம் பெயர்ந்தவர்கள், இங்கே வரும்போது அவர்களை பரிசோதனை செய்வதற்கும் தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நோடல் அலுவலர்கள் சிறப்புப் பணியில் உள்ளனர்' என்று கூறினார்.
இதையும் படிங்க: வீடுகளுக்கே பழங்களை எடுத்துச் செல்லும் அஞ்சல் துறை!