கரோனாவால் இந்தியா கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கி கிடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு உதவ சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தங்களது மாதச் சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவருகிறார்கள்.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஏழை மக்களுக்கு உணவு, மருத்துவம் கிடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 20 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். தேவைப்படும் மக்களுக்கு இந்தச் சேவைகள் கிடைப்பதற்கு துணை ஆணையர்களும் மாஜிஸ்திரேட்டுகளும் ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 21 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே அம்மாநில அமைச்சர்களான திரிப்த் ராஜிந்தர் பஜ்வா, சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ஆகியோர் தங்களுடைய ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
முன்னதாக, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் தலா ரூ. 3,000 நிவாரணம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு!