சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாய அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். இதற்கிடையில், டெல்லியில் வேளாண் சட்டங்கள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து விவசாயிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு தீபாவளியை அனுசரிப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் எதிர்ப்பின் அடையாளமாக தீபாவளி நாளன்று இரவில் தீப்பந்தங்களை ஏற்றி வைப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விவசாயிகளின் தொழிற்சங்கங்களும், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் அவை தொடர்புடைய பிற பிரச்னைகள் குறித்து விவாதங்களை நடத்தின. நவம்பர் 21ஆம் தேதி உழவர் சங்கங்களின் உள் கலந்துரையாடல்கள், மத்திய அரசாங்கத்துடன் மற்றொரு சந்திப்பும் நடக்கவுள்ளதாகத் தெரிகிறது.
கரோனா தொற்று நோயால் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ள பஞ்சாப், மத்திய விவசாய சட்டங்களால் மிகவும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறினார்.