கோவிட்-19 தொற்றுநோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. நேற்று நள்ளிரவு முதல் இந்த ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. நாட்டின் அனைத்து எல்லைகளும் பூட்டப்பட்டன. மேலும், ரயில், விமானம் உள்ளிட்ட பயண சேவைகளும் தடை செய்யப்பட்டன.
சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாபில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள், ஆதரவற்றோர் தினசரி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அமிர்தசரஸ் நகரின் குடிசைப்பகுதிகளுக்கு சென்ற காவல்துறையினர் ஏழைகளுக்கு பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுப் பொருள்களை விநியோகித்தனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை அலுவலர் நீரஜ் குமார், "பெரும்பாலான மக்கள் இப்போது உணவு உள்ளிட்ட பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால் கடந்த மூன்று நாள்களாக தங்கள் வீடுகளில் இந்த ஏழை மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை எங்கிருந்து வாங்குவார்கள் ? எப்படி வாங்குவார்கள் ?. எனவே, அவர்களுக்கு பால் உள்ளிட்ட உணவு பாக்கெட்டுகளை வழங்க முடிவு செய்தோம்" என கூறினார்.
இதையும் படிங்க : கோவிட்-19 அச்சுறுத்தல்: என்.பி.ஆர். பணிகள் ஒத்திவைப்பு!