பஞ்சாபின் சங்கூர் மாவட்டத்தில் உள்ள சங்கால்வாலா கிராமத்தில் விசித்து வந்தவர் ஜக்மால். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவருக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ரின்கு மற்றும் சிலருடன் முன் பகை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி ரின்குவும் அவரது நண்பர்களும் ஜக்மாலை கடத்திச் சென்று, அவரது வீட்டில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் தாகத்தில் தண்ணீர் கேட்ட ஜக்மாலை வற்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜக்மால், பிக்மெர் (PGIMER) எனப்படும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஜக்மாலின் குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தர வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களும், ஊர் மக்களும் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘ஜக்மாலின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டத்தைக் கைவிடமாட்டோம். அவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். ஜக்மாலின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பவோ, எடுத்துச்செல்லவோ மாட்டோம்’ என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ரின்கு உள்ளிட்ட இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட்!