திருச்சி: மத்திய இணை அமைச்சர் ஷோபா ஏற்கனவே கர்நாடக குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு காரணம் எனக் கூறியவர், இந்நிலையில் மீண்டும் தமிழகம் தீவிரவாதிகளை வளர்க்கிறது என கூறியிருப்பது சங்கடமளிக்கிறது என எம்.பி துரை வைகோ கூறியுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தென்னூர், உழவர் சந்தையில் கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த அலுவலகத்தின் திறப்பு விழா துரை வைகோவின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து துரை வைகோவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, “ திருச்சியில் தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் புதுக்கோட்டையில் பொதுமக்களின் மனுக்கள் வாங்குவதற்கான அலுவலகம் திறக்கப்படும். புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் அதற்கான இடம் ஒதுக்கீடு செய்வதற்காக காத்திருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: களை கட்டும் கார்த்திகை, சபரிமலை ஐயப்பன் சீசன்! பழனி முருகனை காண படையெடுக்கம் பக்தர்கள்..
மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நேற்று தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்கும் இடமாக தமிழகம் உள்ளதாக தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ இணை அமைச்சர் ஷோபா கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்புக்கு, தமிழ்நாடு தான் காரணம். ஏற்கனவே தமிழ்நாடுதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது, பயிற்சி கொடுக்கிறது, எனக் கூறி தமிழ்நாட்டு மக்களை அவமானம் படுத்தியுள்ளார்.
அதன் பின்னர், ஊடகங்களில் கண்டனம் தெரிவித்தற்கு பின்னர் என்ன நிர்பந்தம் காரணமோ மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் மீண்டும் இது போல் பேசி உள்ளார். இது போன்றவர்கள் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றனர். என்ன துணிச்சல் இருந்தால் தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சியில் அந்த இணை அமைச்சரின் புகைபடம் கொண்ட பேனரை வைப்பார்கள். இது மிகவும் சங்கடமாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை இது திராவிட மண், மதவாத சக்திகளுக்கு இடம் கிடையாது. எந்த கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் ஒரு போதும் மதவாத சக்திகளுக்கு மக்கள் இடம் அளிக்க மாட்டார்கள்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்