சென்னை: சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கங்குவா குறித்து அதிகமாக மீம்ஸ் பதிவிட்டு வந்தனர். கங்குவா படக்குழுவினர் வட இந்தியா மற்றும் வெளி நாடுகளில் படத்தை அதிகமாக விளம்பரம் செய்த நிலையில், இதுவரை கங்குவா திரைப்படம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்திய அளவில் 57.81 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் 120 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
கங்குவா படத்தின் பின்னணி இசை இரைச்சலாக உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். இதற்கு படக்குழுவினர் சார்பில் திரையரங்குகளில் இரைச்சல் பிரச்சனை சரி செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர். மேலும் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் தவிர படம் நன்றாக உள்ளதாகவும், தேவை இல்லாமல் சமூக வலைதளங்களில் நெகடிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக கூறியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி படம் பார்த்த மக்கள் மத்தியில் முதல் அரை மணி நேரம் நன்றாக இல்லை என்ற கருத்து பொதுவாக நிலவியது. இதனை கருத்தில் கொண்டு தற்போது கங்குவா படத்திலிருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் முதல் அரை மணி நேர காட்சிகள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: களைகட்டும் பொங்கல் ரேஸ்; அஜித்துடன் மோதும் அருண் விஜய்!
தற்போது கங்குவா திரைப்படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 22 நிமிடங்களாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் கங்குவா திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 'மெய்யழகன்' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், படத்திலிருந்து 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்