கரோனா வைரஸ் காரணமாக வேறு மாநிலங்களில் பணிபுரிந்துவந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், '' புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு திரும்பியதைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை, 2020-21ஆம் ஆண்டு காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சாகுபடி செய்யப்படும் ரபி மற்றும் காரிஃப் விவசாய வேலைகளில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
இதனை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முடிவை மத்திய வேளாண் துறை அமைச்சகத்திடம் ஆலோசனை மேற்கொண்டு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை விரைவாக மேற்கொண்டால் விவசாயிகளுக்கு அதிகரித்து வரும் ஊழியர்கள் செலவினைக் குறைப்பதோடு, ஊரக வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியும். இந்தக் கடினமான சூழலில் இந்தியாவின் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தொகுப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உத்தரவாத திட்டத்திற்காக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதால், ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படும் பாடி சாகுபடி பாதிப்பை சந்திக்கவுள்ளது. இதனால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’தெலங்கானா முதலமைச்சர் வரம்பு மீறி பேசுகிறார்’