தமிழ்நாட்டை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டை புதுச்சேரியிலும் வழங்க பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக 10% வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதனை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர் அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பிற்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கோப்புகள் மத்திய அரசின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு பிறகே கலந்தாய்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.