புதுச்சேரி மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம், கடந்த ஜூலை மாதத்தில் நடந்தது. அப்போது ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் மாநிலத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் சட்டசபையில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநிலத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்வதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்து, சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டார்.
சட்டசபை மறுநாள் கூடியபோது அமைச்சரவை கூடி, புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், இந்த விவகாரத்தை மத்திய உள்துறையின் கவனத்திற்கு புதுச்சேரி ராஜ் நிவாஸ் கொண்டு சென்றது.
இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஜிதேந்திரா அகர்வால், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "அகில இந்திய அளவில் விளம்பரம் வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்று, மாநிலத் தேர்தல் ஆணையரை வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் தேர்வு செய்ய வேண்டும். இந்தத் தேர்வு என்பது தலைமைச் செயலர் தலைமையிலான தேர்வுக் கமிட்டி அமைத்து நடக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளை காலத்தோடு முடிக்கும் வகையில் அமைய வேண்டும். தேர்வுக் கமிட்டியில் இடம்பெறும் உறுப்பினர்கள், தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து துணை நிலை ஆளுநர் முடிவு செய்யலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மத்திய அரசு வெளியிட்டுள்ள தெளிவான வழிகாட்டுதலை பார்த்தால் நியமனம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
எனவே, மத்திய உள்துறையின் வழிகாட்டுதலுக்கிணங்க மாநிலத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்படுவதற்கான நடைமுறை, குறித்த காலத்தில் தலைமைச் செயலர் மேற்கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய குடிமக்கள் பதிவேட்டை இடதுசாரி கட்சிகள் ஆதரிக்காது - டி. ராஜா