மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள பாரதியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மரியாதை செய்தனர்.
இதனிடையே புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் அங்குள்ள பாரதி பூங்காவில் பாரதியார் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து, பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட சிவக்கொழுந்து, பாரதியாரின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், மலேசியவாழ் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாரதியாரின் உருவ படத்திற்கு மரியாதை செய்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர் மாலதி, "இந்த ஆண்டு மலேசிய எழுத்தாளர் சங்கம் சார்பில் புதுச்சேரி வந்துள்ளேன். இன்று பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றது பெருமைக்குரியதாக கருதுகிறேன்" எனத் தெரிவித்தார்.