புதுச்சேரி கிருஷ்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வேலன். இவர் வெடிகுண்டு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு மின்தடை காரணமாக இவர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே வைத்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி 67 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தமிழ்வேலன் அளித்த புகாரை அடுத்து லாஸ்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேநாளில் கிருஷ்ணா நகர், லாஸ்பேட்டை பகுதிகளிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த காவல் துறையினர் இரண்டு இளைஞர்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
பின்னர் விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சிந்தாமணி சாலையைச் சேர்ந்த சூரி என்ற அரவிந்தசாமி, புதுச்சேரி கொட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகியோர் என்பதை கண்டுபிடித்தனர். உடனே காவல் துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் காவலர் மற்றும் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனிடையே இரண்டு இளைஞர்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பிரபல நடிகையிடம் இருந்து போதைப்பொருள்கள் பறிமுதல்