கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டது. திடீரென ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இயங்கும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று (மே 22) காலை 10 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வந்ததை அடுத்து புதுச்சேரி ரயில்வே நிலையத்திற்கு பொதுமக்கள் ஆவலோடு வந்து காத்திருந்தனர்.
புதுச்சேரியிலிருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் தமிழ்நாட்டைக் கடந்து செல்லவேண்டும்; அதேசமயம் தமிழ்நாட்டில் ரயில் சேவை கிடையாது என்பதால் புதுச்சேரியில் ரயில் சேவை ஆன்லைன் விண்ணப்பம் இயங்காது என ரயில்வே துறை அதிகாரிகள் வந்திருந்த பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். பின், அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பிறகு முன்பதிவுக்கு வருமாறு அறிவிப்பு பலகை வைத்தனர். இதனால் முன்பதிவு செய்வதற்கு வந்திருந்த வெளிமாநிலத்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.