புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழ்நாடு, வெளி மாநிலங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மூன்று மாதங்களாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், கடந்த ஆண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும் எனவும் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீரென காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் பணிமனையில் நிறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்த நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், மூன்றாவது நாளாக நாளையும் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.