முதலமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடையாக உள்ளார் என புகார் தெரிவித்திருப்பதாக நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து கிரண் பேடி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அரிசி வழங்க ஆளுநர் தடையாக உள்ளார் என முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் பொய் கூறியுள்ளார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. எனவே நாராயணசாமியின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான கோப்புகள் ஆளுநர் வசம் இல்லை. ஆனால் இதில் ஆளுநரின் தலையீடு இருப்பதாக தொடர்ந்து பொய் கூறி வருவது துரதிர்ஷ்டவசமானது.
இதன்மூலம் நாராயணசாமி முதலமைச்சர் பதவியின் மீதான மரியாதையையும் நம்பிக்கையையும் சீர்குலைத்து வருகிறார். மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்போது நம்பிக்கையும் தக்கவைப்பது அவசியம். உண்மையான நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.