கடந்த மே மாதம் புதுச்சேரி உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறைகள் அனைத்தையும் தனியார் மயமாக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதுச்சேரி அரசு, மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திவந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் கூட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மின் துறை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவு புதுச்சேரி மக்களை வெகுவாகப் பாதிக்கும். மத்திய அரசின் இந்த முடிவால் மின் துறையில் பணியாற்றக் கூடிய மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை புதுச்சேரி அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என மின் துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்மொழிந்தார்.
தங்களின் கருத்துக்களைக் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கும் இதுபோன்ற முடிவு சர்வாதிகாரப் போக்கு என்றும், புதுச்சேரி அதிமுகவும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்ப்பதாக அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ”புதுச்சேரி மின் துறை வணிகரீதியாக லாபம் அளிக்கும் துறையாக இருந்து வருகின்றது. மின் விநியோகம் என்பது அத்தியாவசியப் பட்டியலில் உள்ளதால், இதைத் தனியாருக்குத் தாரை வார்க்க முடியாது. அரசின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக இந்தத் திட்டத்தை திணிக்க இயலாது. ஆகவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மின் துறை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தி புதுச்சேரி அரசு இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.