புதுச்சேரி நெல்லித்தோப்பு அருள்படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் காவல் ஆய்வாளர் ஆரோக்கியசாமி (107). இவர் கடந்த 1937ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் புதுவை காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று முத்தியால்பேட்டையில் ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். பின் 1965ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இவருக்கு இருதய மேரி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உட்பட ஐந்து பிள்ளைகள் உள்ளனர். தற்போது நெல்லித்தோப்பில் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில் புதுவையின் புதிய காவல் துறை தலைவராக நியமிக்கப்பட்ட பாலாஜி ஸ்ரீவத்சவா நேற்று பணியில் சேர்ந்தவுடன் காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்த மியூசியத்தை பார்வையிட்டார். அப்போது முன்னாள் காவல் துறை தலைவர் சுனில் குமார் கௌதம், ஆரோக்கியசாமியுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை பார்வையிட்டார். ஆரோக்கியசாமி குறித்த தகவல்களை அருகில் இருந்த காவலர்கள் டிஜிபியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் ஆரோக்கியசாமியை காண விருப்பம்கொண்டு, இன்று காலை அவர் வீட்டிற்கு சென்றார். டிஜிபி பாலாஜியை கண்ட ஆரோக்கியசாமிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அவர் உடல் நலம் குறித்தும், குடும்பத்தாரையும் டிஜிபி விசாரித்தார்.பின் சிறிது நேரம் அவருடன் பேசிய பிறகு அங்கிருந்து சென்றார். அவருடன் எஸ்.பி மாறன் உருளையன்பேட்டை காவலர்கள் உடன் இருந்தனர்.