புதுச்சேரி துணை மாவட்ட ஆட்சியர் சாஷ்வாட் சௌராப் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ' சமுதாயத்தில் போதுமான தகவல்கள், வாய்ப்புகள் நாட்டின் மற்ற பகுதியில் உள்ள இளைஞர்கள் போல பழங்குடியின இளைஞர்களுக்கும் கிடைக்காமல் உள்ளது. அதனை களையும் பொருட்டு பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது.
இதுவரை இந்திய அரசு, நேரு யுவகேந்திரா சங்கத்தின் மூலம் கடந்த 11 ஆண்டுகள் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில், கிராமப்புற இளைஞர்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு தேசிய கட்டுமானப் பணியில் அவர்களை முழுமையாக ஈடுபடுத்தி, வழிநடத்தி திறமைகளை வெளிக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்.
அதற்கு மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விவகாரங்கள் அமைச்சகத்தின்கீழ் நேரு யுவகேந்திரா சங்கத்தின் மூலம் 12ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி வரும் 20ஆம் தேதி புதுச்சேரியில் நடத்தப்பட உள்ளது.
அதில், பங்கேற்க சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கு மாவட்டங்களிலிருந்து 200 இளைஞர்கள் இருபது குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, புதுச்சேரி வரவுள்ளனர். அவர்களுக்கு புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மக்களின் உணவு, கலாசார பரிமாற்றம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை 20ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, 25 ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம், நேரு யுவகேந்திரா சங்கத்தின் ஒத்துழைப்போடு நடைபெற உள்ளது' எனத் தெரிவித்தார்.
அப்போது புதுச்சேரி மாநில நேரு யுவகேந்திரா சங்கத்தின் இயக்குநர் நடராஜ் உடனிருந்தார்.
இதையும் படிங்க: