புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலமுருகன், அங்குள்ள நடைபாதையில் கரும்பு ஜூஸ் கடை நடத்திவந்துள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி இவரது கடையில் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி லெனின் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்துகொண்டு வாய் பேச முடியாத பாலமுருகனிடம் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மாற்றுத்திறனாளி பாலமுருகனை அவர்கள் கல்லால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினர் ரவுடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பாலமுருகனுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், அவரைத் தாக்கிய ரவுடிகள் மீதும், நடவடிக்கை எடுக்காத தன்வந்திரி காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுச்சேரி காதுகேளாதோர் சங்கத்தினர் இன்று சங்க தலைவர் சரவணன் தலைமையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கை தொடர்பான மனுவினை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்தனர்.