புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக பணம் மட்டுமே கொடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததை துணை நிலை ஆளுநர் மக்களுக்கு சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அதில், 'ரேசனில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்ற துணை நிலை ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவிலிருந்து, மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்படுகின்றது என தெளிவாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. மாநில அரசின் கொள்கையை மாற்றியமைக்க ஆளுநருக்கோ, உள்துறை அமைச்சகத்திற்கோ அதிகாரமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கையை ஏற்காமல் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை செயல்படுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்'' என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் - முதலமைச்சர் நாராயணசாமி