புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் தற்போது தினந்தோறும் 300 பேருக்கும், ஜிப்மர் மருத்துவமனையில் 300 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்துவருகின்றோம். இதனை நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு சோதனை செய்யும் அளவில் ஏற்பாடு செய்துவருகின்றோம்.
மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் ஆட்சியர்களை கரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய நியமிப்பது குறித்து நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பரிசீலித்து உத்தரவிடப்படும்.
கூனிச்சம்பட்டு பகுதியில் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தில் 70 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்டி-பிசிர் கருவி மூலம் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ய கால தாமதம் ஆகின்றது. மேலும், இந்த பரிசோதனைக்கு நான்காயிரத்து 500 ரூபாய் வரை செலவாகிறது. ஆண்டிஜென் கருவிகள் மூலம் பரிசோதனை செய்தால் அரை மணி நேரத்தில் சோதனை முடிவுகள் தெரியவரும். மேலும், பரிசோதனைக்கான செலவும் குறைவு. எனவே, மாநிலத்தில் ஆண்டிஜென் கருவிகள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். ஊரடங்கால் பலர் வேலையின்றி தவிப்பதால், செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு மக்களுக்கு இலவச அரிசியை கொடுக்க வேண்டும். இது தொழிலாளர்கள் பசியின்றி வாழ வழிவகுக்கும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
மத்திய அரசு தொடர்ந்து 19ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து உள்ளது. டீசல் 11 ரூபாயும், பெட்ரோல் 10 ரூபாயும் உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும். இதுகுறித்தும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் இதுவரை சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் வந்துள்ளது. இதனால் விலையேற்றத்தை இத்துடன் நிறுத்த வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் விலையேற்றம் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பேசியுள்ளார்.