புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று அனைத்து மத தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், “புதுச்சேரியில் கரோனாவால் இன்று மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
புதுச்சேரி மக்கள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள போதிலும் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாநிலத்தில் வரும் எட்டாம் தேதி முதல் மத வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும். அங்கு அன்னதானம், புனித நீர் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு மீட்டர் இடைவெளி விட்டு தரிசனம் செய்யலாம்.
அதேபோன்று வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து உணவகங்களும் திறக்கப்படும். அதில் 50 விழுக்காடு மக்கள் உணவு அருந்த அனுமதிக்கப்படுவர். உணவகங்களைக் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். சாதி, மத, பேதங்களில் இருந்த நாம் இந்த கரோனா வைரஸ் தொற்றால் பரந்த மனப்பான்மையுடன் மனிதநேயம் கொண்டு உதவிவருகிறோம். இனி நாட்டில் எந்த சூழ்நிலை வந்தாலும் பட்டினிக்கு அனுமதி இல்லை. இந்த நிலை தொடர வேண்டும்.
புதுச்சேரியில் முழு பட்ஜெட் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கான கோப்புகளும் அனுப்பப்பட்டுள்ளன. பட்ஜெட் தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மாநிலத்திற்கான முழு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி அதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.