புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் முறையாக விதிமுறைகளை கடைபிடித்தால் கரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியும். விதிமுறைகளை மீறி செயல்பட் டகடைகளின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இதன் காரணமாக தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவில் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்கள் சிகிச்சை பெற விரும்புகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
கரோனா தொற்று நேரத்தில் மத்திய அரசு, புதுச்சேரிக்கு அளித்துள்ள நிதி பங்கு மிகவும் குறைவாக உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் பேசியுள்ளேன்.
அவர்கள் செவிசாய்க்காமல் இருப்பது மிகுந்த வறுத்தத்தை அளிக்கிறது. மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவது என்பது புதுச்சேரி மாநிலத்திற்கு பொருந்தாது. புதுச்சேரி மாநிலம் சட்டப்பேரவை உள்ள மாநிலம்.
யூனியன் பிரதேசம் அல்ல. புதுச்சேரியை பொருத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோசிக்காமல், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையான முடிவை எடுக்கக்கூடாது மத்திய மின்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
இதற்கு முன்பு பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கும் மின்துறையை தனியார் மயமாக்குவதை எங்கள் அரசு ஏற்காது என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை எங்களுடைய கடிதத்துக்கு பதில் வரவில்லை.
மத்திய அரசு எந்த திட்டத்தையும் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளோம். ஆகவே தொழிலாளர்கள் மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டுமே தவிர மாநில அரசை எதிர்த்து போராடக்கூடாது.
நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மத்திய அரசின் இந்த திட்டத்தை நிறுத்த மின்துறை ஊழியர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.