முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எல்லோரிடமும் அன்பாகவும் இனிமையாகவும், பேசக்கூடியவர் பல ஆண்டு காலம் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
நாடாளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றுவார். எதிர்க்கட்சிகள் பாராட்டுகின்ற வகையில் அவரது உரை இருக்கும். பல நெருக்கடியை சமாளித்து இந்த நாட்டுக்கு நிர்வாகத்தை சிறப்பாக செயல்பட காங்கிரஸ் அரசுக்கு உதவி செய்த தலைவர்.
என்னுடைய ஆசானாக அவர் இருந்துள்ளார். இந்திய நாட்டிற்கு அவர் மிகப்பெரிய சொத்து. அவரை இழந்து நாமெல்லாம் தவிக்கிறோம். அவருடைய இழப்பு நம் நாட்டிற்கு பேரிழப்பு. அவரது இழப்பை தாங்கிக்கொள்ள குடும்பத்தினருக்கு சக்தியை இறைவன் தரவேண்டுமென பிரார்த்திக்கிறேன்" என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.