புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுவையில் கரோனா நோயாளிகளுக்கு அரசு வழங்கும் நிவாரண பொருள்கள் போதுமாதாக இல்லை என்று புகார் வருகிறது. வருவாய்த் துறை மூலம் ஒரு வீட்டிற்கு தடுப்பு வேலி அமைக்க ரூ.5000 வரை செலவு செய்யும் அரசு, அதற்கு மாறாக அந்த வீட்டில் சிகப்பு நிற பெரிய போஸ்டரை ஒட்டி இந்த பணத்தை அவர்களுடைய நிவாரண செலவிற்கு பயன்படுத்த கொடுக்கலாம். அவர்கள் சுய கட்டுப்பாட்டோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அதை மீறுபவர்களை காவல் துறையிடம் தெரிவிக்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் பெறலாம்.
தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வந்தவுடன் அந்த தடுப்பு வேலியை பிரிக்காமல், பல வீடுகளில் 15 நாள்கள் வரை நீண்டுகொண்டே செல்வது ஆடு, மாடு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. உடனே அரசு உணர்ந்து நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரமாக செயல்பட வேண்டும்.
இன்று புதுவையில் மக்களிடம் நோயின் வேதனையை விட அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையால் மக்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு ஆறுதலான நடவடிக்கையுடன், நேரடி பண உதவி வழங்க வேண்டும். புதுச்சேரி முதலமைச்சர் ஆயிரம் படுக்கை வசதி தயார் செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆயிரம் படுக்கை வசதி எங்கே தயார் செய்யப்பட்டிருக்கிறது, அதற்கு உண்டான மருத்துவர்கள், செவிலியர் மற்றும் உபகரணங்கள் எந்த விதமான ஏற்பாடும் இல்லாமல் அரசியல் வெற்று அறிக்கையாக மக்களை ஏமாற்றுவதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, முதலமைச்சர் நிவாரண நிதியை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் பொது நோயாளிகளுடன் அமர வைத்து சோதனை செய்தால் அனைவருக்கும் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்களும் செவிலியர்களும் நியமிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தளர்வுகள் அறிவிப்பு