பரபரப்பான நகர வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டு சிறிது நேரம் இயற்கையோடு உறவாடிவிட்டு வர வேண்டும் என்று நினைப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடமாக திகழ்கிறது ஆரண்ய காடு. புதுச்சேரி அருகே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பூத்துறை பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆரண்ய காடு உருவாக்கப்பட்டுள்ளது
இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட சரவணன் என்ற இயற்கை ஆர்வலரிடம் 1994ஆம் ஆண்டு ஆரோவில் நிர்வாகம் பூத்துறை கிராமத்தில் பொட்டல் காடாக கிடந்த 100 ஏக்கர் நிலத்தை பராமரிக்க ஒப்படைத்தது.
செம்மண் கூழாங்கற்கள் கொண்ட பொட்டல்காடான பூத்துறை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார் சரவணன். காட்டிலேயே தங்கி, ஜவ்வாது மலை செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மரக்கன்றுகளை வாங்கிவந்து நட்டு கிட்டத்தட்ட 25 வருடங்களில் 100 ஏக்கர் நிலம் முழுமையாக மூலகை நிறைந்த காடாக உருவாக்கியிருக்கிறார் சரவணன்.
அவரின் குடும்பத்தார் உழைப்பின் பயனாக தற்போது பச்சைப் போர்வை போர்த்தியது போல் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் இந்த வனத்திற்கு ஆரணிய வனம் என்று பெயர்.
இதுகுறித்து ஆரணிய காட்டை உருவாக்கிய சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில். “ஆரம்ப காலத்தில் வெறும் பொட்டல் காடாக இருந்த நிலத்தில் சிறு சிறு செடிகளை கன்னியாகுமரி ஜவ்வாதுமலை செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டுவந்து நட்டு பாரமரித்தன் விளைவாக இன்று இந்த காடு உருவாகியுள்ளது. இப்பகுதி சிறுவர்கள் எனக்கு உதவியாக இந்தனர்.
நான் நட்டது போக இங்கு வந்த பறவைகள் பழத்தை உண்டு கொட்டைகள் போட்டதில் தானாக செடிகளும் வளர்ந்துள்ளன
இந்த நிலத்தை வளப்படுத்த மழை நீரை வீணாக்காமல் சேமிக்க முடிவுசெய்தேன் அதுதான் இந்த காடு வளர நான் எடுத்த முதல் முயற்சி. இந்தக் காட்டில் சந்தனம், செம்மரம், தேக்கு ,வேங்கை, கருங்காலி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவிதமான மரங்கள் உள்ளன. இங்கு மரங்களை வாழ்விடமாகக் கொண்டுள்ள 250க்கும் அதிகமான பறவை இனங்கள் காணப்படுகின்றன
எரும்பு தின்னி,காட்டுபன்றி,புனுக்கு பூனை என 40க்கும் அதிகமான விலங்கினங்கள் இங்கு தற்போது குடி பெயர்ந்துள்ளன. தற்போது கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மரங்கள் இந்த காட்டில் உள்ளன”. என்றார்
இதுகுறித்து சரவணனின் மனைவி வச்சலா பேசியபோது. ”எனது கணவர் 25 வருடங்களுக்கு முன் இந்தப் பொட்டல் காட்டிற்கு வந்தார். அவருடன் நானும் செடிகளை வாங்கி நடுவதற்கு உதவி செய்தேன். நிறைய பேர் மரங்கள் நட வாய்ப்பு கிடைக்க இல்லை என ஏங்குவது உண்டு அவர்கள் விருப்பப்பட்டால் இங்கே வந்து மரங்களை நடலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்”. என்றார்
இந்த ஆரண்ய காட்டை காண்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் தாவரவியல் அறிஞர்கள் பேராசிரியர்கள் , இயற்கை ஆர்வலர்கள் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு மரம் மற்றும் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சியும் சுற்றுச்சூழல் கல்வி குறித்த பயிற்சியையும் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் சரவணன் இலவசமாக செய்துவருகிறார்.
புதுச்சேரி நகரின் அருகே உள்ள இந்த வனத்தினால் தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது. சரவணன் போன்று காடுகள் வளர்க்க முடியவில்லை என்றாலும் இந்த பூமியை காக்க, பூமியின் உயிர் நாடியான மரங்களை வீட்டுக்கு ஒன்று வளர்த்து நீர் வளத்தை காப்போம்.