புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் ஸ்டாலினுக்கு ராசி இருக்கிறது. அவர் இங்கு வந்து பரப்புரை மேற்கொண்டால் அந்த வேட்பாளர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் எனக்காக ஸ்டாலின் பரப்புரை செய்தார். அதில் நான் சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.
அதேபோல, மக்களவைத் தேர்தலிலும் ஸ்டாலின் பரப்புரை செய்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டும் வாக்கு சேகரித்தார். அந்தத் தேர்தல்களில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றிபெற்றார்கள்.
தற்போது நடைபெறவுள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் நாளை நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரைக்கு வருவது காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ஆரோவில்லில் விரைவில் குதிரையேற்ற தகுதி சுற்றுப் போட்டி!