புதுச்சேரி மாநில சுகாதாரத் துறையில் அண்மையில் மருத்துவர்கள் நியமனம் நடைபெற்றது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், பேரவை துணைத் தலைவர் எம்.என்.ஆர். பாலன் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை இன்று சந்தித்தார். அப்போது மருத்துவர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதை விசாரிக்குமாறு புகார் மனு அளித்தார்.
அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், “பேரவைத் துணைத் தலைவர் அளித்துள்ள புகார் பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் வரும் திங்கள்கிழமை, மக்களில் ஒருவனாக வரிசையில் நின்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து, துறைவாரியான பிரச்னைகளைத் தீர்க்க உதவுமாறு கேட்கவுள்ளேன் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’தீப்பிழம்பின் பின்னணியில் ஜொலித்த மாத்திரி மந்திர்'