புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், ”கரோனா தடுப்புப் பணியில் மருத்துவத்துறை ஊழியர்கள் மிகுந்த கடமை உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசின் கணக்குப்படி 10 லட்சம் மக்களில் 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படவேண்டும். தற்போது 35 ஆயிரம் பேருக்கு புதுச்சேரியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில், கரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புக்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நிதி தரப்படவில்லை. எனவே மாநில பேரிடர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தாலும், மக்கள் மத்தியில் கரோனா தொடர்பான தேவையான விழிப்புணர்வு இல்லை. மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.
தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், பேரவை கூட்டமே நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. நான் உட்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் உமிழ்நீர் பரிசோதனை செய்துள்ளோம். மேலும், எதிர்க்கட்சி தலைவர் பேரவை நிகழ்வுகளில் முகக்கவசமின்றி பங்கெடுத்துள்ளார். அவரை தனிமைப்படுத்திக்கொள்ள கூறியுள்ளேன் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைப் பாதுகாவலர்களுக்குக் கரோனா: புதுச்சேரி சட்டப்பேரவை 2 நாள்கள் மூடல்!