புதுச்சேரி மாநில அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மீன்பிடி தடைக்காலம் முடியக்கூடிய சூழ்நிலையிலும் புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவில்லை. அரசும், ஆளுநரும் திட்டமிட்டு ஒரு மோதலை உருவாக்கி, அதனால் ஒட்டுமொத்த மீனவர்களும் பயனடைய முடியாத சூழலை உருவாக்கியுள்ளனர்.
மேலும், தனி ரேஷன் கார்டு கேட்டு பதிவு செய்துள்ள அனைவருக்கும் சிவப்பு கார்டுகளை உடனே வழங்க வேண்டும். அவர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்டவை கிடைக்க வழி செய்ய வேண்டும். மாநில நலனை கருத்தில் கொண்டு பொய்யான தகவல்களைத் தெரிவிக்காமல் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி சமர்ப்பிக்க வேண்டும். உடனடியாக பேரவையைக் கூட்டி பட்ஜெட் கூட்டத்தை நடத்த வேண்டும். ஏற்கனவே கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி அளித்ததையும் சேர்த்து, இந்த ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!