கரோனா தொற்று காரணமாக முதல்கட்ட ஊரடங்கைத் தொடர்ந்து புதுச்சேரியில் மார்ச் 23ஆம் தேதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. அதன்பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டுக்கு இணையாக விலை உயர்த்தி மதுபானங்கள் மீது கோவிட் வரியை புதுச்சேரி அரசு விதித்தது.
புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் 910 வகையான மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இவற்றில் 154 மதுபான வகைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த 154 மதுபானங்கள் மீதும் தமிழ்நாட்டுக்கு இணையாக கோவிட் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 766 மதுபான பிராண்டுகளுக்கு 25 விழுக்காடு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இணையாக மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளதால் புதுச்சேரிக்கு தமிழ்நாடு குடிமகன்கள் வருவது குறைந்துள்ளது. இதனால் மதுபான விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே அக்டோபர் மாதம் வரை வரிவிதிப்பு நீட்டிக்கப்பட்டது. மீண்டும் மதுபானங்கள் மீது கோவிட் வரி ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே மாதம் முடியும் தருவாயில் வரிவிதிப்பு ரத்துசெய்யப்படும் என மதுபான வியாபாரிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் மதுபான விலை உயர்வு இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் கலால் துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து வரும் மார்ச் 31ஆம் தேதிவரை மீண்டும் வரி உயர்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் விலை உயர்வு அதிருப்தியில் உள்ளனர். மதுபானங்கள் மீதான கோவிட் வரி உயர்வு வரும் மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...போதையில் இருந்த பெயிண்டர்: மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!