கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த ரபிஹா, புதுச்சேரி பல்கலைக்கழக்கத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் மற்றும் பட்டத்தை பெறுவதற்காக அவர் கடந்த 23ஆம் தேதி நடந்த புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்தார்.
அவ்விழாவில் கலந்துகொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்வதற்காக வரும் போது மாணவி ரபிஹா காரணமின்றி காவலர்களால் நிகழ்வு நடந்த அரங்கத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சி நிறைவடைந்து ஜனாதிபதி சென்ற பிறகே அவர் நிகழ்வு நடந்த அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் விழாமேடைக்குச் சென்ற அவர், சான்றிதழை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கப்பதக்கம் வாங்குவதை புறக்கணித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நான் பர்தா அணிந்து இருந்ததால்தான் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டேன் என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ட்வீட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், புதுவைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. நான் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தாலும் அச்சம்பவம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை.
கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்தின் சாராம்சம். இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு சீப்பால் தலைவாரிவிட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்!