புதுச்சேரியில் கொரோனா தொற்று குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலர் அஸ்வினிகுமார், சுகாதாரத் துறை செயலர், சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து முதலமைச்சர் நாரயணசாமி பேசுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய 83 பேரில் 16 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு 14 பேருக்கு கொரோனா பதிப்பு இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரிசோதனை குறித்த முடிவுகள் வரவில்லை என்பதால் இருவர் மட்டும் தனி அறையில் கண்காணிப்பட்டுவருகின்றனர். புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை துண்டு பிரசுரங்கள் மூலம் 50ஆயிரம் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாநில எல்லைகளில் சுற்றுலாப் பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில், காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற திருநள்ளார் சனீஸ்வரன் கோயிலில் உள்ள நலத் தீர்த்த குளத்தில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு வரும் பக்தர்களை மருத்துவர்கள் குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு, தனியார் பேருந்துகளில் கொரோனா வைரஸை தடுக்க மருந்து தெளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கொரோனா எதிரொலி' - வெளிநாட்டினர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்